Thursday, April 19, 2012

வாழ்த்துகிறோம்!

வணக்கம்!

நமது அன்பிற்கினிய நண்பர், புதுச்சேரி கவிஞர் திரு. குறிஞ்சி மைந்தன் அவர்கள் தனது அடுத்த இலக்கிய ஆய்விற்காக, நமது ' அலைபேசி இலக்கியம்' என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்வெய்துகிறோம். ஏற்கனவே தம் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நண்பர் இவ்வாய்வினையும் சிறப்புற முடித்து, மேன்மேலும் விருதுகள் பெற்று திகழ நமது தமிழ்நாட்டு குறுஞ்செய்திக் கவிஞர்கள் மற்றும் இதழாளர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்பு எண்:09566689083

- கிரிஜா மணாளன்
திருச்சி

Monday, March 26, 2012



மின்வெட்டு!
=========

யாரைக்கண்டு வெட்க்ம்
ஓயாமல் ஓடி ஒளிகின்றாள்
'மின்சார'க்கன்னி?


- கு.தமயந்தி

Saturday, December 31, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




எனது இணைய நண்பர்கள்/தோழிகள், தமிழ்நாடு குறுஞ்செய்திக் கவிஞர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


- கிரிஜா மணாளன்

Monday, December 12, 2011

புதிய கவிஞர்களை அன்புடன் வரவேற்கிறேன்!





வணக்கம்.

நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் பலர் இந்த வலைத்தளத்தில் தமது கவிதைகளை வழங்கியிருப்பதைக் கண்டு, புதிய கவிஞர்களும் ஆர்வமுற்று தம் படைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி!

தற்போது எனக்கு அறிமுகமாகியுள்ள கீழ்காணும் பெண் கவிஞர்களின் படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

1. திருமதி. ச. வளர்மதி. ஈரோடு (தமிழ்நாடு)

2. திருமதி. தமயந்தி. கள்ளக்குறிச்சி, (தமிழ்நாடு)



உங்கள் படைப்புகளுடன். இவ்வலைத்தளம் புதிய பொலிவோடு மிளிருமென அன்புடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.


- கிரிஜா மணாளன்

Wednesday, October 5, 2011

அன்புடன் அழைக்கின்றோம்

எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001

சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.
எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங் கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத் தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.
குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.

ஒருங்கிணைப்பாளர்: கிர்ிஜா மணாளன், திருச்சி

விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்

Monday, March 28, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத் தளத்தில் பிரசுரமாகியுள்ள எனது கவிதை:

(அந்தத் தளத்தில் அவ்வப்போது தரப்படும் தலைப்பிற்குத் தக்க கவிதைகளைப் புனைந்து அனுப்புமாறு நமது குறுஞ்செய்திக் குழுமக் கவிஞர்களுக்கு நான் அனுப்பிவரும் தகவலின்படி அவர்கள் எனக்கு அனுப்பும் கவிதைகளை அத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன். இதுவரை நமது குழுமக் கவிஞர்களின் 20 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாதோர், இனியாவது முன்வரவேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்)

நீயா? நானா?

நீயா? நானா என்ற போட்டி
நிலைத்துவிட்ட சமூகம் இது!
அனைத்து இன மக்களுக்கும்
அவலமில்லா வாழ்வுதர
போட்டியிடும் தலைவர்கள்
புறப்படத் தயாரில்லை!
கள்ள ஓட்டில் பதவிபெற்று
கணிசமாக சம்பாதிக்க
கனவுகாணும் காலத்தில்
கரிசனமில்லா மனிதர்களாய்!

நீயா நானா போட்டியால்
நிர்மூலம் தான் சனநாயகம்,
ஓயாத பிரச்சினைகளால்
ஒடுங்கி நிற்கும் மக்களினம்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
(தமிழ்நாடு)

Saturday, March 26, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள்!




அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள் இணையத்தின் "வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் வழங்கிவரும் கவிதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

அத்தளத்தில் கவிதைக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டதும். நான் அனுப்பும் தகவலைக் கண்டு தங்கள் கவிதைகளை அனுப்பி, அவர்கள் கவிதைகளை நான் பதிவிடும் நல்வாய்ப்பை எனக்களித்து வரும் தோழர்கள்/தோழியர்களுக்கு என் நன்றி.

உங்கள் ஒத்துழைப்பினை எனக்கு தொடர்ந்து அளியுங்கள்.

கூகுள் குழுமங்களான "அன்புடன்", "முத்தமிழ்". "பல்சுவை" ஆகிய குழுமங்களில் நமது நண்பர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. கவிதை ஆர்வலர்கள் அக்குழுமங்களுக்கு சென்று கண்டு, உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் அவர்களுக்கு வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நன்றி!

அன்புடன்,

கிரிஜா மணாளன்.